புதுப்பெண்ணின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தது ஏன்? கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

உடன்குடி அருகே புதுப்பெண்ணின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று உடலை கிணற்றில் வீசியது ஏன்? என்று கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2017-09-20 20:30 GMT

உடன்குடி,

உடன்குடி அருகே புதுப்பெண்ணின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று உடலை கிணற்றில் வீசியது ஏன்? என்று கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கிணற்றில் புதுப்பெண் பிணம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள செல்வபுரத்தை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி மகன் செல்வகுமார்(வயது 32). இவருக்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த நித்யா என்ற நித்யவதிக்கும்(30) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. செல்வகுமார் தனது மனைவி நித்யாவுடன் செல்வபுரம் ஊருக்கு அருகே உள்ள பெரிய தோட்டத்தில் தங்கி கருவேல மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார்.

நித்யா அந்த கருவேல மரங்களை கரி மூட்டம் போட்டு வந்தார். இவர்களுடன் மேலும் பலர் அந்த தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி மதியம் கணவன்–மனைவி இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர். அன்று மாலை 6 மணிக்கு அந்த தோட்டத்தில் உள்ள 40 அடி ஆழம் உள்ள பெரிய கிணற்றில்(2 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது) நித்யா பிணமாக மிதந்தார்.

பிரேத பரிசோதனை

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு, குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு படையினர் நித்யாவின் உடலை மீட்டனர்.

தொடர்ந்து உடல் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார் விசாரணை நடத்தினார்.

கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை

பிரேத பரிசோதனை அறிக்கையில் நித்யா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, அதன் பின்னர் கிணற்றில் வீசப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார், செல்வகுமாரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட செல்வகுமார், குலசேகரன்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரி கணேஷ்குமாரை சந்தித்து நித்யாவை கொலை செய்தது நான்தான் என ஒப்புக்கொண்டு, அவரிடம் சரண் அடைந்தார்.

இதனையடுத்து குலசேகரன்பட்டினம் போலீசாரிடம் செல்வகுமார் ஒப்படைக்கப்பட்டார். மனைவியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து செல்வகுமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியதாவது;–

கழுத்தை இறுக்கி கொன்றேன்

எனக்கும், நித்யாவிற்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும், செல்வபுரம் அருகே உள்ள தோட்டத்தில் கூரை வீட்டில் தங்கி வேலை பார்த்தோம். சம்பவத்தன்று மதியம் 2 மணிக்கு நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். அதன் பின்னர் கூரை வீட்டுக்குள் சென்றோம். அப்போது நான் நித்யாவை உடல் உறவுக்கு அழைத்தேன். ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டார்.

இதனால் எனக்கும், நித்யாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நான் நித்யாவை அடித்து கீழே தள்ளி விட்டேன். இதில் அவள் மயக்கம் அடைந்தாள். மயக்கம் தெளிந்து நித்யா பிரச்சினை செய்து விடக்கூடாது என்பதற்காக வீட்டில் இருந்த கயிற்றால் நித்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் யாரும் பார்க்காதபோது, நித்யாவின் உடலை தூக்கி சென்று தோட்டத்தில் உள்ள பெரிய கிணற்றில் போட்டுவிட்டேன்.

சந்தேகம் வராமல் இருக்க...

என் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக மீண்டும் வேலை செய்வது போல் செய்தேன். மாலை 5 மணிக்கு நித்யாவை காணவில்லை என்று கூறி தேடுவது போல் நடித்தேன். தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களில் சிலரும் என்னுடன் சேர்ந்து நித்யாவை தேடினார்கள். நான் நைசாக அந்த கிணற்றின் அருகில் தேடுவதற்காக அவர்களை அழைத்து சென்று விட்டு விட்டு தள்ளி சென்று விட்டேன்.

அப்போது அங்குள்ள கிணற்றில் நித்யாவின் உடல் கிடந்ததை அவர்கள் பார்த்து விட்டு சத்தம் போட்டனர். நானும் எதுவும் தெரியாதது போல் அங்கு சென்று நித்யாவின் உடலை பார்த்து கதறி அழுவது போல் நடித்தேன். அதன் பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு நித்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது.

எப்படியும் தப்பி விடலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் போலீசார் துருவி, துருவி என்னிடம் விசாரணை நடத்தினர். இதனால் தப்பிக்க முடியாது என தெரிந்து கொண்ட நான் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

சிறையில் அடைப்பு

இதனை தொடர்ந்து செல்வகுமாரை கைது செய்த குலசேகரன்பட்டினம் போலீசார், அவரை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

கணவரே மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்