நீர்வரத்து அதிகரிப்பு: வைகை அணையின் நீர்மட்டம் 38 அடியாக உயர்வு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதன் எதிரொலியாக வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2017-09-20 23:00 GMT

ஆண்டிப்பட்டி,

தமிழக–கேரள எல்லையில் குமுளி அருகே உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சராசரியாக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது வினாடிக்கு 709 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 37.96 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 794 மில்லியன் கனஅடியாக இருந்தது.

மேலும் செய்திகள்