சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை, சிறுமி பலி

சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 20–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Update: 2017-09-20 22:07 GMT

சேலம்,

இருப்பினும், மர்ம காய்ச்சலால் ஏற்படும் உயிர் பலி தொடர்வதால் பொதுமக்கள் மத்தியில் ஒருவிதமான பீதி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையும், சிறுமியும் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

ஓமலூர் அருகே உள்ள கீழ்காடையாம்பட்டியை சேர்ந்தவர் ராஜூ. இவரது 4 மாத ஆண்குழந்தை சர்வேஷ். கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் சர்வேஷ் பாதிக்கப்பட்டான். இதனால் குழந்தையை சிகிச்சைக்காக பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்து தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி குழந்தை சர்வேஷ் திடீரென இறந்தான். இதைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

இதேபோல, ஆத்தூர் மஞ்சினி மேற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் கங்கா (வயது 7). இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி, கடந்த சில நாட்களாக மர்மகாய்ச்சலாலும் அவதிப்பட்டு வந்தாள். இதனால் கங்காவை அவரது பெற்றோர் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் காய்ச்சல் குணமடையவில்லை.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை சிறுமி கங்காவை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் சிறுமி கங்கா நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தாள். இதைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். ஒரே நாளில் மர்மகாய்ச்சலுக்கு குழந்தை, சிறுமி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்