முதல்–மந்திரி சித்தராமையா மைசூரு வருகை

மைசூரு தசரா விழாவில் கலந்து கொள்ள முதல்–மந்திரி சித்தராமையா 2 நாட்கள் பயணமாக நேற்று மைசூருவுக்கு வருகை தந்தார்.

Update: 2017-09-20 23:24 GMT

மைசூரு,

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 30–ந் தேதி வரை நடக்கிறது. சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீசுவரி அம்மனுக்கு, முதல்–மந்திரி சித்தராமையா முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வைப்பதன் மூலமாக தசரா விழாவை கன்னட கவிஞர் நிசார் அகமது தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில் மைசூரு தசரா விழாவில் கலந்து கொள்ள முதல்–மந்திரி சித்தராமையா 2 நாட்கள் பயணமாக நேற்று மைசூருவுக்கு வருகை தந்தார். மைசூரு தசரா விழாவையொட்டி இன்று காலை 8.45 மணிக்கு சாமுண்டி மலையில் சாமுண்டீசுவரி அம்மனுக்கு நடக்கும் சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொள்கிறார்.

அதன்பின்னர் காலை 10.30 மணிக்கு சாமுண்டி மலையில் போலீஸ் உதவி மையத்தை அவர் தொடங்கி வைக்கிறார். காலை 10.45 மணிக்கு சாமுண்டி மலையில் சுற்றுலா துறை சார்பில் செய்யப்பட்டு இருக்கும் தொலைக்காட்சி, வியூபாயிண்டை அவர் தொடங்கி வைக்கிறார்.

அதன்பின்பு காலை 11.30 மணிக்கு மைசூரு கலாமந்திராவில் தசரா திரைப்பட தொடக்க விழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளார். மதியம் 3.30 மணிக்கு தேவராஜ் அர்ஸ் விளையாட்டு அரங்கில் நடக்கும் மல்யுத்த போட்டியையும் அவர் தொடங்கி வைக்கிறார். மாலை 4.30 மணிக்கு மைசூரு டவுன் நஜர்பாத் பகுதியில் உள்ள குப்பண்ணா பூங்காவில் தசரா விழாவையொட்டி நடக்கும் மலர் கண்காட்சியையும், இரவு 6.30 மணிக்கு அரண்மனை வளாகத்தில் தசரா கலாசார நிகழ்ச்சிகளையும் சித்தராமையா தொடங்கி வைக்க உள்ளார்.

அதன்பின்னர் இரவு மைசூரு ராமகிருஷ்ணாநகரில் உள்ள தனது வீட்டில் தங்கும் சித்தராமையா 22–ந் தேதி எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி அருகே உள்ள கபினி அணையில் சிறப்பு பூஜைகள் செய்கிறார்.

மேலும் செய்திகள்