எடியூரப்பாவின் பகல் கனவு பலிக்காது சித்தராமையா பேச்சு

கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வரும் எடியூரப்பாவின் பகல் கனவு பலிக்காது என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

Update: 2017-09-20 23:40 GMT

கோலார் தங்கவயல்,

கோலாரில் தமக்கா பகுதியில் ரூ.30 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகம், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றை திறந்து வைப்பதற்காகவும் மற்றும் ரூ.130 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும் முதல்–மந்திரி சித்தராமையா நேற்று கோலாருக்கு வந்தார். பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் அவர் கோலாரை வந்தடைந்தார்.

பின்னர் அவர் பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகத்தையும், புதிய கலெக்டர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார். அதையடுத்து அவர் புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டு ரிமோட் பொத்தானை அழுத்தி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

விழா முடிந்ததும் முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

என் மீதும், என்னுடைய குடும்பத்தின் மீதும் எவ்வித வழக்குகளும் ஐகோர்ட்டிலோ, சுப்ரீம் கோர்ட்டிலோ இல்லை. ஆனால் எடியூரப்பா மீது ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் உள்ளன. அவர் அடுத்த ஆண்டு(2018) கர்நாடகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றிபெறும் என்றும், ஆட்சியை கைப்பற்றுவோம் என்றும் கூறி வருகிறார். அவரது பகல் கனவு பலிக்காது.

தற்போது உள்ள சூழ்நிலையில் எடியூரப்பா தனது சொந்த ஊரில் போட்டியிட்டாலும் தோற்றுவிடுவார். அதனால்தான் அவர் தேர்தலில் போட்டியிட வேறு மாவட்டங்களில் தொகுதிகளை தேடிக் கொண்டிருக்கிறார். அவர் கூறும் எந்த குற்றச்சாட்டுக்கும் நாங்கள் பதில் கூற தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்