ஆளில்லா விமானம் மூலம் கட்டிடங்களை படம் எடுத்து வரிவிதிப்பு நாராயணசாமி தொடங்கி வைத்தார்

ஆளில்லா விமானம் மூலம் கட்டிடங்களை படம் எடுத்து வரிவிதிக்கும் முறையை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2017-09-22 00:12 GMT

புதுச்சேரி,

புதுவையில் வீட்டு வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது வீட்டுவரி வசூல் தீவிரமடைந்துள்ளது. இதில் பலர் கட்டிடங்கள், நிலப்பரப்புகள், அதன் பயன்பாடுகள் குறித்து உண்மை நிலவரங்களை தெரிவிக்காமல் குறைந்த அளவிலேயே வரி செலுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த குறைகளை களையும் பொருட்டு ஆளில்லா குட்டி விமானத்தை பறக்கவிட்டு அதிலுள்ள கேமரா மூலம் கட்டிடத்தை துல்லியமாக படம் எடுத்து அளவிட்டு, அந்த சொத்து எந்த பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது என்ற முழு விவரத்தையும் அறிந்து அதன்படி வரி விதிக்கப்படும். இந்த வகையில் எந்தெந்த சொத்துவரி கணக்கில் வரவில்லை என்ற விவரம் தெரிந்துவிடும். அதன்படி இந்த விவரம் நகராட்சியில் கிடைத்தபின் உரிய அறிக்கைகள் பிறப்பித்து சொத்து வரி வசூலிக்கப்படும்.

இத்தகைய குட்டி விமானத்தை புதுவை தலைமை செயலகம் அருகே பறக்கவிட்டு அதன் செயல்பாட்டினை அதிகாரிகள் முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு விளக்கினார்கள். மேலும் தலைமை செயலகதத்தில் அந்த விமானம் மூலம் எடுத்த படங்கள் காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை செயலாளர் ஜவகர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவையில் வீட்டுவரியை உயர்த்தி அறிவித்துள்ளோம். வீட்டு உரிமையாளர்களிடம் அவர்களின் வீடுகள் குறித்த விவரங்களை கேட்டு வரி செலுத்த கூறினோம். ஆனால் நிறைய பேர் சரியான தகவல்களை தரவில்லை. அத்தகையவர்களின் சொத்துகளை குட்டி விமானம் மூலம் படமெடுத்து சரியான வரியை நிர்ணயிக்க உள்ளோம்.

இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்ய முடியாது. இந்த பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடியும். சிலர் வீடுகள் என்று கூறி அதை வர்த்தகத்துக்காக பயன்படுத்துகின்றனர். அத்தகைய கட்டிடங்களுக்கு வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி விதிக்கப்படும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்