வாலிபர் கொலை 4 பேர் கைது நண்பரின் மனைவியை கிண்டல் செய்ததால் ஆத்திரம்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். நண்பரின் மனைவியை கிண்டல் செய்ததால் அவர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

Update: 2017-09-22 23:30 GMT

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம்–அம்பத்தூர் சாலையில் கூவம் ஆற்று பாலத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். மதுரவாயல் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

அதில் கொலையானவர் மதுரவாயல், வடக்கு மாதா தெரு, 2–வது குறுக்கு தெருவை சேர்ந்த குணசீலன்(வயது 27) என்பது தெரிந்தது. இவர், அமைந்தகரையை சேர்ந்த ராஜ் என்ற தீபக்ராஜ்(30) என்பவர் கொலை வழக்கில் தொடர்பு உடையவர் என்பதால் அதில் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

இது தொடர்பாக குணசீலனின் தந்தையிடம் போலீசார் விசாரித்த போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைந்தகரையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள அயப்பாக்கத்தை சேர்ந்த தனது நண்பர் செந்தில் என்பவருடன் குணசீலன் சென்றதாக தெரிவித்தார்.

போலீசார் செந்திலை தேடிச்சென்றபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. அவருடைய நண்பர்களான திருமங்கலத்தை சேர்ந்த ஹேமந்த்குமார்(25), அண்ணாநகரை சேர்ந்த தமிழரசன்(22), பயிறு என்ற விக்கி(19) மற்றும் 18 வயது வாலிபர் ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் செந்திலின் மனைவியை கிண்டல் செய்ததால் குணசீலனை கொலை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைந்தகரையில் நடந்த திருமண விழாவில் செந்தில் தனது மனைவி கலைவாணி மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டார். குணசீலனும் அவருடன் சென்றார். பின்னர் செந்தில், நண்பர்கள் அனைவரையும் அயப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒன்றாக அமர்ந்து மது அருந்தினார்.

அப்போது போதையில் இருந்த குணசீலன், செந்திலின் மனைவி கலைவாணியை கிண்டல் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த செந்தில், ஓங்கி அடித்ததில் குணசீலன் மயங்கி விழுந்தார். பின்னர் வீட்டில் இருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு உடலை அயப்பாக்கம் ஏரியில் வீசி விட்டனர்.

ஏரியில் இருந்து உடல் மிதந்ததால் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என கலைவாணி கூறியதால், மறுநாள் திங்கட்கிழமை காலையில் தனது நண்பரின் ஆட்டோவில் மீண்டும் ஏரிக்கு சென்றனர். ஏரியில் மிதந்த குணசீலன் உடலை மீட்டு கோணி பையில் போட முயன்றனர்.

ஆனால் பையில் உடல் செல்லாததால் கை, கால்களை கட்டிப்போட்டு ஆட்டோவில் எடுத்துச்சென்று வானகரம் அருகே கூவம் ஆற்று பாலத்தில் உடலை வீசியது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 18 வயது வாலிபரை கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்த போலீசார், மற்ற 3 பேரையும் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள செந்தில், அவருடைய மனைவி கலைவாணி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்