பக்கத்து வீட்டில் நகை, பணம் திருடிய பெண் கைது கண்காணிப்பு கேமரா மூலம் கையும் களவுமாக சிக்கினார்

அருமனை அருகே பக்கத்து வீட்டில் தொடர்ந்து நகை, பணம் திருடி வந்த பெண், கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் கையும் களவுமாக சிக்கினார்.

Update: 2017-09-24 23:15 GMT

அருமனை,

அருமனை அருகே கடையாலுமூடு, பீலிக்கோட்டை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது42), வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சோபா பிளாரன்ஸ் (34). அருள்தாசின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயது முதிர்ச்சியால் படுத்த படுக்கையாகிவிட்டார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த பாசில்லா (38) என்பவர் அடிக்கடி மூதாட்டியிடம் சென்று நலம் விசாரித்து சிறு, சிறு உதவிகள் செய்து வந்தார். இதன்மூலம் அவர் அருள்தாஸ் குடும்பத்தினரின் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மூதாட்டி இறந்தார். அதன்பின்பும், பாசில்லா வழக்கம்போல் அருள்தாஸ் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக அருள்தாஸ் வீட்டில் இருந்து நகை, பணம் போன்றவை மாயமாகி வந்தன. கடந்த வாரம் சோபா பிளாரன்ஸ் தனது குழந்தையின் கையில் கிடந்த தங்க வளையலை கழற்றி மேஜையில் வைத்து விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். திரும்ப வந்து பார்த்த போது அதை காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் இந்த சம்பவங்கள் குறித்து வெளிநாட்டில் உள்ள தனது கணவரிடம் தெரிவித்தார்.

தனது வீட்டுக்குள் பக்கத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே வந்து செல்கிறார்கள். இதனால், யாரை சந்தேகப்படுவது என தெரியாமல் கணவன்–மனைவி இருவரும் திணறினர். இறுதியில் தொடர் திருட்டில் ஈடுபடும் நபரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக யாருக்கும் தெரியாமல் வீட்டின் உள்ளே கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.

இதையடுத்து நேற்று காலையில் சோபா பிளாரன்ஸ் தனது வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் ஆலயத்திற்கு பிரார்த்தனைக்கு சென்றார். சிறிது நேரத்தில் அவரது வீடு தீப்பிடித்து எரிவதாக உறவினர் ஒருவர் செல்போனில் தகவல் தெரிவித்தார். உடனே, அவர் வேகமாக வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்தது. மேலும், வீட்டின் உள்ளிருந்து புகை வந்து கொண்டிருந்தது. உடனே, குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

இதற்கிடையே, வீடு தீப்பிடித்த போது, உள்ளிருந்து பாசில்லா தப்பி ஓடியதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து சோபா பிளாரன்ஸ் வீட்டின் உள்ளே சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டார். அப்போது, பாசில்லா வீட்டில் பணம் திருடிய காட்சிகள் பதிவாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இவர் ஆலயத்திற்கு சென்றதும் பக்கத்து வீட்டை சேர்ந்த பாசில்லா பின்புற கதவை நைசாக திறந்து உள்ளே வந்தார். அவர் வழக்கமாக பணம், நகை இருக்கும் அறைக்குள் சென்று ரூ.2 ஆயிரத்தை திருடினார். பின்னர், வெளியே செல்ல திரும்பிய போது அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு திகைத்தார். உடனே, கேமராவை உடைத்து, அதன் வயரில் துணியை சுற்றி தீ வைத்துள்ளார்.

கேமராவில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் பதிவாகி இருக்கும் கம்ப்யூட்டர் உள்ள அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த அறை கதவை உடைத்து அந்த காட்சிகளை அழிக்க முயன்றார். ஆனால், கதவை உடைக்க முடியவில்லை. அதற்குள் வீட்டுக்குள் தீ பிடித்ததால் அவர் வெளியே தப்பி ஓடினார்.

இந்த காட்சிகள் அனைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து கடையாலுமூடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாசில்லாவை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இவர் இதுவரை கொஞ்சம் கொஞ்சமாக 5 பவுன் நகை, பணம் போன்றவை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து பாசில்லாவை கைது செய்தனர்.

‘பல நாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்’ என்ற பழமொழிக்கு ஏற்ப பக்கத்து வீட்டில் தொடர் கைவரிசை காட்டிய பெண் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்