சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்ற கோரி வியாபாரிகள் நாளை கடையடைப்பு

குளச்சல் நகராட்சி பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வலியுறுத்தி நாளை கடை அடைப்பு போராட்டம் நடத்துவதாக வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் அறிவித்துள்ளனர்.

Update: 2017-10-09 22:45 GMT
குளச்சல்,

குளச்சல் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் களிமார் உப்பளம் பகுதியில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் உரம் தயாரிப்பு தொடங்கும் முன் வண்டிகளில் கொண்டு செல்லப்படும் குப்பைகள் உப்பளம் பகுதியில் கொட்டுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 கடந்த 9 மாதங்களாக இந்த குப்பை கொட்டும் பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பைகளை கொண்டு சென்ற நகராட்சி வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர். இதனால் நகராட்சி பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் முக்கிய சந்திப்பு, வீதிகளில் மலைபோல் தேங்கிக்கிடக்கிறது. இதனை அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் குப்பை பிரச்சினை தொடர்பாக அரசியல் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் குளச்சலில் நடந்தது.

இதில் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், நகர தி.மு.க. செயலாளரும் முன்னாள் நகர்மன்ற தலைவருமான நசீர், முன்னாள் துணைத்தலைவர் லதா ராபின்சன், நகர பா.ஜ.க. தலைவர் கண்ணன், நகர வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர் உள்பட பிரமுகர்கள், மகளிர் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், குளச்சல் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நகராட்சியை வலியுறுத்தி நாளை (புதன்கிழமை) நகரத்தில் உள்ள கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆட்டோ, கார், டெம்போ, வேன் போன்ற வாகனங்கள் வேலை நிறுத்தம் செய்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்