மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி ஆலூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி ஆலூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-09 22:19 GMT
கொள்ளேகால், 

சாம்ராஜ்நகர் தாலுகா ஆலூர் கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக சாலை, சாக்கடை கால்வாய், குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால், அங்குள்ள சாலைகள் முழுவதுமாக சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அந்தப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதனை சீரமைக்கவும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி மக்கள் நேற்று ஆலூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில பெண்கள், சேறும், சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆலூர் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அந்தப்பகுதி மக்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அந்தப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்