டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை வைகோ குற்றச்சாட்டு

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என வைகோ கூறினார்.

Update: 2017-10-11 00:04 GMT
மதுரை,

மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

16 வருடங்களுக்கு பிறகு ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நாடுகளின் அமைப்பின் கருத்தை கேட்க, சபை 2 நிமிடம் ஒதுக்கும். அரசியல் அல்லாத அமைப்புகளுக்கு ஒரு நிமிடம் வாய்ப்பு கொடுக்கும். அங்கே 27 அரங்குகள் உள்ளன. அதில் 10 அரங்குகளில் நான் பேசினேன்.

முதல் பேச்சே ஈழத்தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு வாழ்த்து சொல்வதா என்று குற்றம் சாட்டினேன். மேலும், ஐ.நா.வின் பொது செயலாளர், ஈழத்தமிழர்கள் கொன்று குவித்த சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். இதுபோல் பல முக்கியமான நிகழ்வுகள் பற்றி பேசினேன்.

தமிழகத்தில் டெங்கு பிரச்சினையை பொறுத்தவரையில் 3 மாதத்திற்கு முன்பே அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டும், தமிழக அரசு அதற்கான விழிப்புணர்வோ, முன் எச்சரிக்கை நடவடிக்கையோ எடுக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. போதுமான மருத்துவர்கள் இல்லை. இதன் காரணமாகவே டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவம்பர் 20-ந் தேதி மாநில சுயாட்சி மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் அனைத்து கட்சிகளையும் அழைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்