வாயில் கதவை இழுத்து மூடி அரசு பொறியியல் கல்லூரி ஊழியர்கள் போராட்டம்

7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி வாயில் கதவை இழுத்து மூடி புதுவை அரசு பொறியியல் கல்லூரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-11 00:16 GMT
காலாப்பட்டு,

காலாப்பட்டை அடுத்த பிள்ளைச்சாவடியில் புதுவை அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை தங்களுக்கும் அமல்படுத்தப்படுத்தக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பரசுராமன் தலைமையில் கல்லூரி நுழைவு வாயில் கதவை இழுத்து மூடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கதவு மூடப்பட்டதால் கல்லூரிக்கு வந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளே செல்ல முடியவில்லை. அவர்கள் வாசலிலேயே காத்திருந்தனர். மதியம் 12 மணிக்கு மேலும் போராட்டம் தொடர்ந்ததால், வாசலில் காத்திருந்த மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிச்சென்றனர். இதனால் நேற்று வகுப்புகள் நடைபெறவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் கல்லூரிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதை ஏற்க மறுத்த ஊழியர்கள், தங்களிடம் கல்லூரி உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதுபற்றி கல்லூரி முதல்வரிடம் போலீசார் தெரிவித்தனர். உடனே கல்லூரி முதல்வர் தனஞ்செழியன் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதனை ஏற்று ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக பொறியியல் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்