கைதி கொலை வழக்கு: சுபாஷ் பண்ணையார் நெல்லை கோர்ட்டில் சரண்

கைதி கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Update: 2017-10-11 00:43 GMT
நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் அருகே உள்ள புல்லாவெளி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்ற சிங்காரம்(வயது 50). இவர் தேவேந்திரகுல வேளாளர் அமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியனின் ஆதரவாளர். சிங்காரத்தை ஒரு வழக்கு விசாரணைக்காக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து போலீசார், தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ஒரு காரில் அழைத்து சென்றனர்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் அருகில் அந்த கார் சென்றபோது ஒரு கும்பல் அந்த காரை வழிமறித்து சிங்காரத்தை வெட்டிக்கொன்றது. இந்த கொலை தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் 13 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சுபாஷ்பண்ணையார், தாராசிங் ஆகிய இருவர் மட்டும் தலைமறைவாக இருந்தனர்.

தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

இந்த வழக்கு விசாரணை நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட சுபாஷ் பண்ணையார் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகவில்லை. போலீசார் அவரை தேடி வந்தனர். அவரை பிடிக்க முடியாததால் அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர்.

இந்த நிலையில் சிங்காரம் கொலை வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டு சுபாஷ்பண்ணையார், தாராசிங் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணை நடைபெறும் கோர்ட்டில் சுபாஷ் பண்ணையார், தாராசிங் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கோர்ட்டில் சரண்

இதனைத்தொடர்ந்து சுபாஷ் பண்ணையார், தாராசிங் ஆகிய இருவரும் நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நீதிபதி சந்திரா முன்பு நேற்று சரண் அடைந்தனர். அவர்களை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சுபாஷ் பண்ணையார், தாராசிங் ஆகிய இருவரும் கோர்ட்டின் பின்பக்க வாசல் வழியாக வெளியே சென்று காரில் ஏறி சென்றனர்.

சுபாஷ் பண்ணையார் கோர்ட்டில் சரண் அடைந்ததையொட்டி நெல்லை கோர்ட்டில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்