பெற்றோருக்கு பணம் அனுப்ப முடியாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பெற்றோருக்கு பணம் அனுப்ப முடியாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-10-11 08:20 GMT
வெள்ளகோவில்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள முருகன்குடியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் வேலய்யன் (வயது 22). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே திருமங்கலத்தில் உள்ள ஒரு நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதே மில்லில் முருகன்குடியை சேர்ந்த கலைமணி (21) என்ற பெண்ணும் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும் ஒரே ஊர் என்பதால் நெருங்கி பழகினார்கள். இந்த பழக்கம் அவர்களிடையே காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின்னர் புதுமண தம்பதிகள் இருவரும், நூற்பாலையில் உள்ள குடியிருப்பில் தங்கி, வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மில் குடியிருப்பில் வேலய்யன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் கலைமணி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து போன வேலய்யனின் பெற்றோர், பணம் கேட்டதாகவும், அவர்கள் கேட்ட பணத்தை வேலய்யனால் அனுப்ப முடியாததால் அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்