தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற கோரி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம்

விருத்தாசலம் அருகே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற கோரி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-11 22:30 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள கச்சிபெருமாநத்தம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு விருத்தாசலத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. கச்சிபெருமாநத்தம்- விருத்தாசலம் இடையே உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

கடந்த சில நாட்களாக விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வீடுகள் முன்பும், சாலையில் உள்ள பள்ளங்களிலும் மழைநீர் தேங்கியது. அதில் இருந்து அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகியது.

இந்த நிலையில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள பொதுமக்கள் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து வீடுகள் முன்பும், சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரியும், மர்மகாய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவ முகாம் நடத்தக்கோரியும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

நாற்று நடும் போராட்டம்

இந்த நிலையில் நேற்று காலை கச்சிபெருமாநத்தம் கிராம மக்கள், தங்கள் வீடுகள் முன்பு தேங்கியுள்ள தண்ணீரிலும், சாலைகளில் தேங்கிய கழிவுநீரிலும் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்