20 சதவீத போனஸ் வழங்கக்கோரி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

20 சதவீத போனஸ் வழங்கக்கோரி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-12 05:36 GMT
பந்தலூர்,

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் நெல்லியாளம், கொளப்பள்ளி, கூடலூர் பாண்டியாறு, சேரம்பாடி, தேவாலா, நடுவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 7 ஆயிரம் தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு தினசரி சம்பளமாக ரூ.234 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தொழி லாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சம்பளம் இதுவரை உயர்த்தப்படவில்லை. இதனால் தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளமாக ரூ.300 வழங்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில் 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என டேன்டீ நிர்வாகம் அறிவித்தது. இது தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதனால் 20 சதவீத போனஸ் வழங்க கோரி தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்கள் நேற்று டேன்டீ அலுவலகங்கள் முன்பு திரண்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 20 சதவீத போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கொளப்பள்ளி, நெல்லியாளம், பாண்டியாறு, தேவாலா, சேரம்பாடி உள்பட அனைத்து டேன்டீ அலுவலகங்கள் முன்பும் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொளப்பள்ளியில் பி.டபுள்யூ.சி. தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும், சேரம்பாடியில் வக்கீல் சிவசுப்பிரமணியன் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அனைவரும் வேலைக்கு சென்றனர். இதேபோல் பணி முடிந்து மாலையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

குறைந்த சம்பளம் வழங்குவதால் இன்றைய விலைவாசிக்கு ஏற்ப குடும்பத்தை நடத்த முடிவது இல்லை. ஆண்டுதோறும் 20 சதவீத போனஸ் வழங்கி வந்த நிலையில் தற்போது 10 சதவீத போனஸ் மட்டுமே வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி காலை மற்றும் மாலை நேரத்தில் டேன்டீ அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டங்கள் மற்றும் மறியலில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்