கட்டிடம் இடிந்து விழுந்து 8 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டிடம் இடிந்து விழுந்து 8 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து திட்டக்குடியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-21 22:45 GMT
விருத்தாசலம்,

நாகை மாவட்டம் பொறையாறில் நேற்று முன்தினம் அரசு போக்குவரத்து கழக பணிமனை இடிந்து விழுந்ததில் டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட 8 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கிட வேண்டும், மேலும் திட்டக்குடியில் இயங்கும் அரசு போக்குவரத்து பணிமனை கட்டிடமும் முறையாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. இந்த பணிமனை கட்டிடத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், பணிமனை முழுவதும் குண்டும் குழியுமாக இருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை சரி செய்திட வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்களின் ஓய்வறையை சீரமைத்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி பகுதி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு பணிமனையில் இருந்து பஸ்களை இயக்காமல் நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து வழக்கம் போல் பஸ்களை இயக்கினர். 

மேலும் செய்திகள்