தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1,500 பேர் பங்கேற்பு விஜயகுமார் எம்.பி. பார்வையிட்டார்

நாகர்கோவிலில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1,500 பேர் கலந்து கொண்டனர். முகாமை விஜயகுமார் எம்.பி. பார்வையிட்டார்.

Update: 2017-10-28 22:45 GMT

நாகர்கோவில்,

தமிழக அரசு படித்த இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு கிடைத்திட செயல் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதன்படி குமரி மாவட்ட நிர்வாகமும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையும் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நாகர்கோவில் கோணத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று காலை முதல் மாலை வரை நடந்த்தின.

இந்த வேலைவாய்ப்பு முகாமில், லார்சன்ஸ் டர்போ லிமிடெட், ஐ.சி.ஐ.சி.ஐ. அகாடமி, ஹிதாஜே இந்தியா பம்ப்ஸ் டிவி‌ஷன், ஒமேகா மற்றும் 45–க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்த வேலைவாய்ப்பு முகாமையொட்டி நேற்று காலையிலேயே அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். இதையொட்டி கல்லூரியில் உள்ள 30 வகுப்பறைகளில் தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் வேலைகேட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களின் சான்றிதழ்களை சரிபார்த்து வேலைக்கு தேர்வு செய்தனர்.

இந்த முகாமை, குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் எம்.பி. பார்வையிட்டார். அவருடன் அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ், அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திரன், கனகராஜ், தாணுப்பிள்ளை மற்றும் பலர் உடன் சென்றனர்.

முகாமில் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., 6–ம் வகுப்பு, 8–ம் வகுப்பு மற்றும் 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் என சுமார் 1,500–க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களில் வேலைக்காக 400–க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 100 பேருக்கு மாலையில் வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குனர், அண்ணா பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் டி.வி.சிவசுப்பிரமணியபிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்