தி.மு.க. உட்கட்சி மோதல் வெடித்தது: முன்னாள் அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது யார்?

சேலத்தில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது யார்? தி.மு.க. உட்கட்சி மோதல் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-10-28 23:15 GMT
சேலம்,

சேலம் குமாரசாமிப்பட்டி ராம்நகரில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.எம்.செல்வகணபதி வீடு உள்ளது. அங்கு அவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சென்னைக்கு கட்சி பணி தொடர்பாக டி.எம்.செல்வகணபதி சென்றிருந்தவேளையில் அவரது மகன் அரவிந்தசாமி, மருமகள் சுகன்யா ஆகியோர் வீட்டில் இருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் இவரது வீட்டில் மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டை வீசிவிட்டு ஓடி விட்டனர்.

வீட்டின் வெளியே பயங்கர சத்தம் கேட்டு அங்கு வந்த அரவிந்தசாமி, சுகன்யா, வீட்டின் வராண்டாவில் நிறுத்தியிருந்த கார், மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினரும் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை எரிந்து சேதமானது. இது பற்றிய தகவல் உடனடியாக சென்னையில் இருந்த டி.எம்.செல்வகணபதிக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அவர் உடனடியாக புறப்பட்டு நேற்று காலை சேலம் வந்தார். பின்னர் அவர் எரிந்து போன கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பார்த்தார். மேலும், இதுபற்றி தகவல் அறிந்தவுடன் அவரது ஆதரவாளர்களும், தி.மு.க.வினரும் வீட்டின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, தடய அறிவியல் நிபுணர்கள், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்திற்கு வந்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். ஆனால் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை.

இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் டி.எம்.செல்வகணபதி புகார் அளித்தார். அதில், சேலம் குமாரசாமிப்பட்டி ராம்நகரில் மகன், மருமகள் வீட்டில் இருந்தநிலையில், நள்ளிரவில் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதில் கார், மோட்டார் சைக்கிள் சேதமாகியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது தெரியவில்லை. அவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டி.எம்.செல்வகணபதியின் வீட்டின் அருகே ஒரு இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது யார்? என்று கண்டுபிடிக்கும் விசாரணையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சேலம் அரிசிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் டி.எம்.செல்வகணபதி தலைமையில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கான கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் ராஜேந்திரன் ஆதரவாளர்களுக்கும், டி.எம்.செல்வகணபதி ஆதரவாளர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

இந்த உட்கட்சி மோதல் எதிரொலியாக பழிவாங்கும் நோக்கத்துடன் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும், வீட்டு முன்பு பாட்டில் துகள் ஏதும் சிக்காததால் பெட்ரோல் குண்டுதான் வீசப்பட்டதா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் தி.மு.க.வுக்கு 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க தலைமை முடிவு எடுத்துள்ளது. அதன்படி தீவிர உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. சேலத்தில் ஒரு லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க தலைமையின் அனுமதியை பெற்று, அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறேன். எனது பணியை பிடிக்காத சிலர் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம். எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன். இன்னும் முழுவீச்சில் என்னுடைய பணியில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்