திருச்செங்கோடு அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

திருச்செங்கோடு அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானாள்.

Update: 2017-10-28 22:45 GMT
எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு அடுத்த மேட்டுப்பாளையம் மாதா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வத்சலா.

இவர்களது மகள் யாசினி என்ற அனான்சியா (வயது 6). தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 23-ந் தேதி யாசினிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவளை திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு யாசினிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையாததால் உடல்நிலை மோசமடைந்தது.

இதனை அடுத்து மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் யாசினி பரிதாபமாக இறந்து போனாள். மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பொதுமக்கள் முற்றுகை

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

தங்கள் பகுதியில் நாமக்கல் முதல் திருச்செங்கோடு வரை சாலை விரிவாக்க பணிக்காக மூடப்பட்ட சாக்கடை கால்வாய் கடந்த ஆறு மாதங்களாக மூடியே கிடப்பதால் சாக்கடை நீர் தேங்கி புழுக்கள் உற்பத்தியாகி உள்ளது. இதனால் சுகாதாரக்கேட்டால் ஒரு சிறுமி பலியாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் பயன்பாட்டில் இல்லாத ஒரு கட்டிடம் அருகே புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை உடனே சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு வந்த எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேசை பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி கேட்டனர். சாலை விரிவாக்க பணியின்போது மூடப்பட்ட சாக்கடை கால்வாய் 6 மாதமாக திறக்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர். உடனடியாக சாக்கடையில் கழிவுநீர் செல்லவும், தேங்கி உள்ள மழைநீரை அகற்றவும் நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்