அதிகரிக்கும் ‘சிசேரியன்’

இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 30 சதவீதம் வரை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

Update: 2017-10-29 08:30 GMT
ந்தியாவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 30 சதவீதம் வரை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனை மத்திய அரசும் உறுதி செய்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் இரண்டு குழந்தைகளில் ஒன்று சிசேரியன் மூலமே பிறப்பதாக தெரியவருகிறது.

சண்டிகார் மாநிலம்தான் சிசேரியனில் முன்னிலையில் இருக்கிறது. அங்கு 98.35 சதவீத பிரசவங்கள் சிசேரியன் மூலமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

நகரங்களை எடுத்துக்கொண்டால் கான்பூரில் 75.98 சதவீதமும், நாக்பூரில் 71.89 சதவீதமும், டெல்லியில் 67.83 சதவீதமும் சிசேரியன் மூலம் பிரசவம் நடந்துள்ளது. 2005-ம் ஆண்டுகளில் 27.7 சதவீதம்தான் சிசேரியன் நடந்திருக் கிறது.

அதிகபட்சமாக 10 முதல் 15 சதவீதம் வரையிலேயே சிசேரியன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் அளவீடாக இருக்கிறது. அதுவும் பிரசவத்தின்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே சிசேரியனை பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கூறுகிறது. இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால், பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களில் 20 சதவீதம் பேர் சிசேரியனை விரும்புகிறார்கள். தங்கள் குழந்தை நல்ல நாளில், நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. பிரசவ வலியை தவிர்க்கவும் இந்த மாற்றுவழியை தேர்ந்தெடுக்கிறார்கள்.

சிசேரியன் பிரசவம் அதிகரிப்பதற்கு மருத்துவ உலகை குறைசொல்லும் போக்கு பெருகிக்கொண்டிருக்கிறது. அதைவிட வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல்களே முக்கிய காரணம். முந்தைய காலங்களில் பெண்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போதுகூட வீட்டுவேலைகளை செய்து வந்தார்கள். இப்போது அவர்கள் வீட்டு வேலைகளை செய்வதில்லை. வேலைகள் அனைத்துக்கும் சமையல் அறை உபகரணங்களையே பயன்படுத்து கிறார்கள். அதனால் உடலுழைப்பு குறைந்து போய்விட்டது. அத்துடன் திருமண வயதை தள்ளி போடுவதும் சிசேரியன் பிரசவத்திற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. ஒரு பகுதி பெண்கள் திருமணத்தை தள்ளிவைத்துவிடுகிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாகும்போது 30 வயதைக் கடந்துவிடுகிறார்கள். அதுவும் சிசேரியனுக்கு ஒரு காரணமாகி விடுகிறது. 

மேலும் செய்திகள்