சோதனை மூலம் கைது நடவடிக்கை மேற்கொண்டால் சட்டப்படி எதிர்கொள்வோம் டி.டி.வி. தினகரன் பேட்டி

சோதனை மூலம் கைது நடவடிக்கை மேற்கொண்டால் சட்டப்படி எதிர்கொள்வோம் என்று திருவண்ணாமலையில் நேற்று அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.

Update: 2017-11-11 23:15 GMT
திருவண்ணாமலை,

அ.தி.மு.க.(அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். இங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் கடந்த 21 ஆண்டுகளுக்கு மேலாக திருவண்ணாமலைக்கு வந்து செல்கிறேன். அருணாசலேஸ்வரரை பார்ப்பதற்காக திருவாதிரையன்று வருவதாக இருந்தது. வருமான வரித்துறை சோதனை போன்ற காரணங்களால் வர முடியவில்லை. சோதனை முடிந்த நிலையில் தற்போது குடும்பத்துடன் வந்துள்ளேன்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மூக்குபொடி சித்தரை பார்த்து வருகிறேன். இதை புதுசாக சித்தரித்து வருகின்றனர். அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கின்ற 95 சதவீத தொண்டர்களையும், என்னை போன்ற நிர்வாகிகளையும் முடக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் விரும்புகின்றனர். அவர்களிடம் பலம் இருப்பதினால் அவர்களது அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இதுபோன்ற மெகா வருமானவரி சோதனை தேவையா? என்று விரைவில் மக்களுக்கு தெரியவரும்.

இது நீண்டநாட்களாக திட்டமிட்டு செய்யப்பட்ட சோதனை தான். இந்த சோதனை தேவையா, இல்லையா என்று தமிழ்நாடு மக்களின் கருத்துக்கே வைக்கி றேன். என்னை பொறுத்தவரை எனது பண்ணை வீட்டிலும், அலுவலகம் மற்றும் எனது மனைவி அலுவலகத்திலும் சோதனை நடந்தது. எனது வீடு, எனது பங்குதாரர், உதவியாளர் மற்றும் நண்பர்கள், பல்வேறு ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடந்து உள்ளது. நான் செல்லும் இடங்கள், எனக்கு தெரிந்தவர்கள் வீட்டிலும் சோதனை நடக்கலாம். நான் தற்போது திருவண்ணாமலைக்கு வந்து உள்ள இடத்திலும் கூட வருமான வரித்துறை சோதனை நடத்தப்படலாம்.

சங்கர், ராஜ்மவுலி படங்கள் போன்று மிக பிரம்மாண்டத்தை காண்பிக்கின்றனர். எவ்வளவு தூரம் ‘ஹிட்’ ஆகிறது இந்த படம் என்று பார்ப்போம்.

எனது வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை செய்து விட்டு சென்று விட்டனர். நான் 25 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். 20 ஆண்டுகள் என்னை சிறையில் அடைத்தாலும் பின்னர் வெளியே வந்து மக்கள் மத்தியில் முறையிடுவேன். எனது வீட்டில் கற்கண்டு இருந்தாலும் சிலர் வைரம் என்கிறார்கள். அவர்கள் நினைப்பது போன்று எனது வீட்டில் பாதாள அறையும் கிடையாது

எனக்கு ஆதரவாக இருந்த திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ் வீட்டிலும் சோதனை நடந்தது. ஆனால் அமைச்சராக உள்ள காமராஜ் மீது பல்வேறு குற்றசாட்டு உள்ளது. அவர் வீட்டில் சோதனை நடைபெறவில்லை.

அதே நேரத்தில் என்னிடம் நெருங்கி உள்ளவர்களின் வீட்டிலும் சோதனை நடந்து உள்ளது. இதுபோன்று நடைபெற்ற சோதனை தவறு என்பது சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு நாளை தெரிய வரும்.

இந்த வருமான வரித்துறை சோதனை என்பது ஒரு தலைபட்சமாக நடைபெறுகிறது என்றுதான் அனைத்து கட்சி தலைவர்களும் சொல்கிறார்கள். இது நடைபெறும் காலம், இடம் போன்றவற்றை பார்க்கும் போது அவ்வாறு தான் தோன்றுகிறது.

சோதனையின் போது அதிகாரிகள் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டனர். நாங்களும் அவர்களுக்கு முழு ஆதரவு கொடுத்தோம். ஆனால் 3 மணிநேரத்தில் முடிக்க வேண்டிய சோதனையை அவர்கள் 3 நாட்கள் நடத்தி உள்ளனர்.

நாங்கள் இந்த நாட்டில் இருக்க கூடாது என்று சிலர் நினைக்கின்றனர். சோதனை மூலம் கைது நடவடிக்கை போன்றவை மேற்கொண்டால் சட்டப்படி எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் அவர் குடும்பத்துடன் கீழ்நாச்சிப்பட்டில் உள்ள வராகி அம்மன் கோவிலிலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். 

மேலும் செய்திகள்