விலகி சென்றவர்கள் விரைவில் மீண்டும் வந்து சேருவார்கள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச்சு

விலகி சென்றவர்கள் விரைவில் மீண்டும் வந்து சேருவார்கள் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

Update: 2017-11-12 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாநகராட்சி, குழுமிக்கரை சாலையில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பொது நிதி ரூ.16 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 28 புதிய எல்.இ.டி. தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன. அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு புதிய தெரு விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

ஏழை, எளிய மக்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில் தெருவிளக்கு, சாலைவசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது போன்று மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சிக்கு வருகை தந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளார். அந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்.

மேலும் ஒரு வாரத்திற்குள் நல்ல செய்தி வரும். நம்மிடம் இருந்து விலகி சென்றவர்கள் நம்மிடையே மீண்டும் வந்து சேருவார்கள். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறும். அனைத்திலும் நாம் வெற்றி பெறுவோம். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொன்னபடி 100 ஆண்டுகள் நமது கட்சி தமிழகத்தை ஆட்சி செய்யும். அனைத்து தரப்பு மக்களும் அரசினுடைய திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் வளர்மதி பேசியதாவது;-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர தினமும் 20 மணி நேரம் உழைத்தார்கள்.

அதைத்தொடர்ந்து தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி தற்போது திருச்சி மாவட்டத்திற்கு ரூ.400 கோடியில் புதிய திட்டங்களை வழங்கி உள்ளார். இந்த திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் குமார் எம்.பி., முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், முதன்மை பொறியாளர் அமுதவள்ளி, வழக்கறிஞர் ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்