வாரிசு சான்றிதழுக்கு ரூ.200 லஞ்சம்: இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூர், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் கடந்த 2007–ம் ஆண்டு வாரிசு சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

Update: 2017-11-13 22:30 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 48). இவர் கடந்த 2007–ம் ஆண்டு வாரிசு சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அங்கு இளநிலை உதவியாளராக பணிபுரிந்த அகமது மசூது என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.200 லஞ்சம் கேட்டுள்ளார்.

 இது குறித்து கலைச்செல்வன், விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையில் பேரில் கடந்த 19.7.2007 அன்று தாலுகா அலுவலகத்தில் இருந்த அகமது மசூதுவிடம், கலைச்செல்வன் ரூ.200 லஞ்சம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி, அகமது மசூதுவிற்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அகமது மசூது தற்போது விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் செய்திகள்