ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான காலம் நெருங்கி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான காலம் நெருங்கி வருவதால், அதனை நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

Update: 2017-11-19 23:00 GMT
சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் மறைந்த இந்திராகாந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, இந்திராகாந்தியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில், இந்திராகாந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளும் வழங்கப்பட்டது. அடுத்த நிகழ்வாக தமிழ்நாடு மருத்துவ அணி தலைவர் எம்.பி.கலீல் ரகுமான் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாமை திருநாவுக்கரசர் தொடங்கிவைத்தார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா எழுதிய ‘இந்திராவின் வீர வரலாறு’ என்ற புத்தகத்தை திருநாவுக்கரசர் வெளியிட, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி பெற்றுக்கொண்டார். தொடர் நிகழ்வாக, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் ஏற்பாட்டின் பேரில், த.மா.கா. மாவட்ட துணைத்தலைவர் ஏ.பி.கோட்டி தலைமையில், திருநாவுக்கரசர் முன்னிலையில் ஏராளமானோர் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தனர்.

விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, எஸ்.சி.பிரிவு மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், சிவ.ராஜசேகரன், க.வீரபாண்டியன் மற்றும் எஸ்.கந்தராஜ், தனராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவின் போது, திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் பல மாதங்கள் போராட்டம் நடத்தியும், பிரதமர் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. தொழில் அதிபர்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யும் அரசாங்கம், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய தயங்குவது ஏன்?

தமிழகத்தில் வேலையில்லாமல் சுமார் 1 கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள். அரசு காலிப்பணியிடங்களோ குறைந்த அளவில் தான் உள்ளது. எனவே அதில், தமிழக இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அதற்கான காலம் நெருங்குகிறது. எனவே தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ஜல்லிக்கட்டு நடத்த முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் மீது தாங்கமுடியாத வரிச்சுமை ஏற்பட்டுள்ளது. தற்போது, குஜராத் தேர்தல் தோல்வி பயம் காரணமாக பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க முன் வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வால்-டாக்ஸ் சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மேலும் செய்திகள்