ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பாம்பனில் 3–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Update: 2017-11-29 22:30 GMT

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ராமதீர்த்தம், லட்சுமண தீர்த்தம் உள்பட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த 6 படகுகள் கரைக்கு அடித்து வரப்பட்டு சேதமடைந்தன.

இலங்கை அருகே புயல் சின்னம் உருவாகி உள்ளதை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 3–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

பலத்த காற்று காரணமாக நேற்று காலை ரெயில் பாலத்தின் நுழைவு பகுதியில் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. காற்றின் வேகம் குறைந்தபின் ரெயில்கள் மிக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. கடற்கரையை ஒட்டியுள்ள குடிசைகளில் கடல்நீர் புகுந்தது. பலத்த காற்றால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலூர் மாவட்டத்தில் நேற்று தொடர்ந்து 3–வது நாளாக மழை பெய்தது. கடலூரில் அவ்வப்போது பலத்த மழை பெய்தவண்ணம் இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. சூறாவளி காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை.

நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. மேலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. நாகை துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று 3–வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மேலும் செய்திகள்