தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும்

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும். வெளிநாட்டு மணலை அரசே இறக்குமதி செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-11-29 23:15 GMT

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த எம்.ஆர்.எம்.ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமையா, மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:–

எங்களது நிறுவனம் உரிய அனுமதி பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலை செய்து வருகிறது. இந்தியாவில் அனைத்து கட்டுமான பணிகளுக்கும், இயற்கையான மணலையே பயன்படுத்தி வருகிறோம். இந்திய வர்த்தக அமைச்சகம் 2014–ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பாணையின்படி மணலை இறக்குமதி செய்து விற்பதற்கான உரிமத்தை எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது.

அதனடிப்படையில் மலேசியாவில் இருந்து 53,334 மெட்ரிக் டன் மணலை இறக்குமதி செய்து தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வைத்துள்ளோம். இதற்காக ஜி.எஸ்.டி. உள்பட வரியாக ரூ.38 லட்சத்து 39 ஆயிரத்து 347 செலுத்தியுள்ளோம்.

இந்தநிலையில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு வினியோகம் செய்வதற்காக 96 டன் மணலை 6 லாரிகளில் கொண்டு சென்றபோது கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடம் முறையிட்டபோது தமிழக கனிமவள சட்டப்படி தனியார் மணல் விற்பனை செய்ய முறையான அனுமதி பெற வேண்டும் என்று கூறினார்கள். மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மணலை வெளியே கொண்டு செல்லவும் அனுமதி மறுத்துள்ளனர்.

ஆனால் நாங்கள் இந்திய வர்த்தக அமைச்சகத்திடம் முறையான அனுமதி பெற்றே இறக்குமதி செய்து வருகிறோம். கடந்த 28–ந்தேதிக்கு பின்னர் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலுக்காக ஒவ்வொரு நாளுக்கும் 2 லட்சம் ரூபாயை வாடகை செலுத்த வேண்டும். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

அதிக பணத்தை முதலீடு செய்து இறக்குமதி செய்த மணலை துறைமுகத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்காததும், மணலுடன் 6 லாரிகளை பறிமுதல் செய்ததும் சட்ட விரோதம். எனவே, இறக்குமதி செய்த மணலை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க அனுமதி அளிக்க வேண்டும். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 6 லாரிகளையும் மணலுடன் எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மணலுக்கு வாடகை வசூலிக்க இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

அப்போது மனுதாரர் இறக்குமதி செய்த மணலை தமிழகத்தில் விற்க உரிமம் பெறவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உடனே குறுக்கிட்ட நீதிபதி, “முறையான அனுமதியுடன் இறக்குமதி செய்து, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை செலுத்தியநிலையில் மணலை விற்க அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது. தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய உரிமம் பெறவில்லை என்பதால் அனுமதி மறுக்கிறீர்கள். ஆனால் இறக்குமதி மணலை விற்க உரிமம் பெறுவதற்கான வழிகாட்டல் எதுவும் கூறப்படவில்லை. இந்தநிலையில் இறக்குமதி செய்யப்பட்ட தடை செய்யப்படாத பொருளை விற்பனை செய்ய ஒரு மாநிலம் வழியாக மற்றொரு மாநிலத்துக்கு கொண்டு செல்வதை மத்திய அரசே அனுமதிக்கிறது. இதற்கு தடை விதிக்க முடியாது” என்று தெரிவித்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கடந்த 16–ந்தேதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்தார். அவர் அளித்த தீர்ப்பு வருமாறு:–

“இன்னும் 600 ஆண்டுகளில் பூமி ஒரு எரிபந்து போல ஆகிவிடும் என்று இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். இயற்கை வளங்களை பாரபட்சமின்றி சுரண்டுவது பூமியின் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதால் ஆற்றின் இயற்கையான போக்கு மாறுவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், நிலத்தடி நீரின் தன்மை குறைதல், பல்லுயிர் பெருக்க தடை உள்ளிட்டவை நிகழும்.

ஒரு காலத்தில் தமிழகத்தில் வேளாண்மை தான் பிரதான தொழிலாக இருந்தது. இப்போதும் கூட தேசிய அளவில் வேளாண்மையில் தமிழகம் முக்கிய பங்கு அளித்து வருகிறது. ஆனால் இது ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. மேலும் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை நாட வேண்டியது உள்ளது.

போதுமான மழை பொழிவு இருந்தபோதும் மழைநீரை சேமித்து வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் சண்டையிடும் நிலை உள்ளது.

ஆறுகளையும், ஆற்றுப்படுகைகளையும் பாதுகாப்பதை விட்டுவிட்டு அண்டை மாநிலங்களுடன் தண்ணீருக்காக பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறோம். மணல் குவாரிகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் இழப்பு மீட்டெடுக்க முடியாதது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.

ஆறுகளையும், ஆற்றுப்படுகைகளையும் பாதுகாப்பதால் விவசாயத்தை காக்க முடியும். அதுதவிர தட்பவெட்ப நிலையை பாதுகாப்பதுடன், காலநிலை மாற்றத்தில் நேர்மறையான தாக்கம் ஏற்படும்.

தொடர்ந்து ஆற்றுமணலை அள்ளுவதால் சுற்றுச்சூழல் சீரழிவது மட்டுமல்லாமல் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்த வழக்கில் மனுதாரர் முறையான விதிகளை பின்பற்றி வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்துள்ளார். அதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவர் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை செலுத்தியும் மணலை துறைமுகத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இறக்குமதி செய்யப்பட்ட மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது என்று துறைமுக அதிகாரிகளுக்கு கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார். வெளிநாட்டு மணலை துறைமுகத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்ல தடை விதிக்க கலெக்டருக்கு அதிகாரம் கிடையாது.

எனவே மாநில சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் நலன்கருதியும் கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

1. இன்று முதல் 6 மாதத்துக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும். புதிதாக மணல் குவாரிகளை திறக்கக்கூடாது.

2. சுற்றுச்சூழலை சமன்படுத்தும் நோக்கத்தில் ஜல்லியை தவிர்த்து பிற கிரானைட் குவாரிகள், கனிமவள குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும்.

3. வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு இறக்குமதி செய்பவர்கள், இறக்குமதி தொடர்பான ஆவணங்களை முறையாக கைவசம் வைத்திருக்க வேண்டும்.

4. புவியியல் துறை வல்லுநர் குழு அமைத்து, இறக்குமதி செய்யப்படும் மணலின் தரத்தை ஆய்வு செய்த பின்னர் தான் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.

5. இந்த உத்தரவின் மூலம் மணல் தட்டுப்பாடு ஏற்படும்பட்சத்தில் மாநில அரசே மணலை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அவர்களின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் மணல் போக்குவரத்தை கண்காணிக்க உத்தரவிட வேண்டும்.

7. சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க முக்கியமான இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்க வேண்டும். சோதனைச் சாவடிகளில் உள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட சோதனை சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்கள் குறித்து முறையான ஆவணங்களை பராமரிக்க வேண்டும். எல்லா சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, அவை ஒரே சர்வரின் கீழ் இயங்க வேண்டும்.

8. சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, வாகனச்சான்றுகளை ரத்து செய்ய வேண்டும்.

9. சட்டவிரோத மணல் கடத்தலால் ஏற்படும் இழப்பை தடுக்க குழு அமைத்து, உரிய இழப்பீட்டை தனிநபர், தனியார் நிறுவனங்களிடம் வசூலிக்க வேண்டும். மணல் கடத்தலில் தொடர்புடைய அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. மணல் இறக்குமதி என்பது, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும்.

11. மணல் இறக்குமதியை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக மாநில அரசு தேவைப்படும்பட்சத்தில் சட்டம் இயற்றலாம்.

12. பொதுமக்கள் ஏமாற்றப்படாத வகையில் இறக்குமதி செய்யப்படும் மணலுக்கு தரச்சான்று பெறப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் சோதிப்பது அவசியம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்