நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி: விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி

உப்புத்துறை பகுதியில் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Update: 2017-11-29 22:30 GMT

உப்புத்துறை,

உப்புத்துறை பகுதியில் சிலர், பல ஆண்டுகளாக குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என கூறி அந்த நிலங்களுக்கு நிலவரி வாங்க அரசு மறுக்கிறது. மேலும் அந்த நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு களம் இறங்கி உள்ளது.

பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு அரசு நிலவரி வசூல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் உப்புத்துறை கிராம நிர்வாகம் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இதுதொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை பீர்மேடு தாலுகா அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தாசில்தார் ஷாஜி தலைமை தாங்கினார். பிஜுமோள் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தாசில்தார் ஷாஜி பேசும்போது, நிலவரி வசூல் செய்வது தொடர்பாக அறிக்கை தயார் செய்து கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும். மேலும் இதுகுறித்து முதல்–மந்திரி, வருவாய்த்துறை மந்திரி, நிலவருவாய்த்துறை கமி‌ஷனர் ஆகியோரை நேரில் சந்தித்து எடுத்துரைத்து தீர்வு காணப்படும்.

அதுமட்டுமின்றி வருகிற 4–ந் தேதி வருவாய்த்துறை கமி‌ஷனர் சம்பவ இடத்தை பார்வையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. நிலவரி உடனடியாக வசூல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்