காட்பாடிக்கு வந்த ரெயிலில் மது கடத்திய 2 பேர் கைது 518 மதுபாக்கெட்டுகள் பறிமுதல்

பெங்களூருவிலிருந்து காட்பாடிக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 518 மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

Update: 2017-11-29 23:00 GMT
காட்பாடி,

காட்பாடி ரெயில்வே பாதுகாப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா மற்றும் போலீஸ்காரர் முகேஷ்மீனா ஆகியோர் நேற்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

ரெயில் நின்றதும் அதில் இருந்து 2 பேர் பெரிய பைகளுடன் இறங்கி சென்றனர். அவர்கள் கொண்டு சென்ற பைகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை நிறுத்தி பைகளை சோதனை செய்தனர். பைகளில் அதிக எண்ணிக்கையிலான பாக்கெட்டுகள் இருந்தன.

இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காட்பாடி அக்ராவரத்தை சேர்ந்த குமார் (வயது 48), காட்பாடி சி.எம்.சி. காலனியை சேர்ந்த நேசக்குமார் (49) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் ‘ரம்’ மற்றும் ‘விஸ்கி’ ஆகியவற்றை கலந்து அதை பாக்கெட்டுகளில் அடைத்து பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. பைகளில் வைத்திருந்த 518 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து குமார், நேசக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாக்கெட்டுகள், வேலூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்