முதியவரை கொலை செய்த தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை திருவாரூர் கோர்ட்டு உத்தரவு

திருவாரூர் அருகே தண்ணீர் தேங்கியதில் ஏற்பட்ட தகராறில் முதியவரை கொலை செய்த தந்தை-மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-11-29 22:30 GMT
திருவாரூர்,

நன்னிலம் அருகே நெம்மேலி கிராம தெற்கு தெருவில் வசித்து வந்தவர் ராதா (வயது 60). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (58). இவருடைய மகன் ராஜகுரு (31). இருவருடைய வீட்டிற்கு இடையே தேங்கிய தண்ணீரால் ராதாவிற்கும், ராஜகுருவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ராதாவை, ராஜகுரு மற்றும் அவரது தந்தை பாலகிருஷ்ணன் ஆகியோர் சேர்த்து தாக்கினர். இதனை கண்ட ராதாவின் மகன் பாஸ்கர் தடுக்க வந்த போது அவரையும் ராஜகுரு தாக்கினார். அப்போது ராதாவை மண்வெட்டியால் தந்தையும், மகனும் சேர்த்து கொலை செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து நன்னிலம் போலீசார்் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணன், ராஜாகுரு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவாரூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நேற்று விசாரணை முடிந்து மாவட்ட அமர்வு நீதிபதி கலைமதி தீர்ப்பு வழங்கினார். இதில் முதியவரை கொலை செய்த பாலகிருஷ்ணன், ராஜகுரு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து தந்தை- மகன் ஆகியோரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்