மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2017-11-29 21:51 GMT

மும்பை,

மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமான நிலையத்தின் சரக்கு பிரிவில் உள்ள கழிவறையில் நேற்று மாலை 6 மணியளவில், காகித சீட்டு ஒன்று கிடந்தது. இதனை தனியார் பாதுகாவலர் ஒருவர் எடுத்து பிரித்து பார்த்தார்.

அதில், ‘சரக்கு பிரிவில் 26.1.2018 அல்லது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படும்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி போலீசாரிடம் தெரியப்படுத்தினார். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து விமான நிலையத்தில் அங்குலம், அங்குலமாக சோதனை போட்டனர்.

சரக்கு பிரிவில் இருந்த பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். விமான நிலையத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருக்கக்கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதேவேளையில், பயங்கரவாதிகளின் நாசவேலையை முறியடிக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்