கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் தீக்குளிக்கப்போவதாக பரவிய தகவலால் பரபரப்பு

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பெண் தீக்குளிக்கப்போவதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-12-11 23:00 GMT

நாகர்கோவில்,

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு கொடுக்க வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாசலைத்தவிர மற்ற வாசல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு, விடுமுறை நாட்களில்கூட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமுக்கு மனு கொடுக்க வருபவர்களில் சந்தேகப்படும்படியான நபர்கள், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

குமரி மாவட்டத்தை உலுக்கி எடுத்த ஒகி புயல் ஓய்ந்த பின்னரும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளின் பிரச்சினை இன்னும் ஓயாமல் இருந்து வருகிறது. திங்கட்கிழமையான நேற்று ஒகி புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் மனு கொடுக்க வரலாம் என்ற நம்பிக்கையிலும், அப்போது ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் மருங்கூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது மகன் மற்றும் மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக தகவல் பரவியது. இது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உஷார் அடைந்த போலீசார் மனு அளிக்க வருபவர்களை சோதனை செய்தபிறகே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுப்பினர்.

இவ்வாறு சோதனை நடந்துகொண்டிருக்கும்போது மருங்கூர் பெரியகுளம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி எஸ்டின் (வயது 35) தனது குழந்தைகளுடன் மனு அளிக்க வந்தார். அப்போது போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் மண்எண்ணெய் பாட்டில், கேன் எதுவும் இல்லை. இதனால் நிம்மதி அடைந்த போலீசார் அவரை, கூட்ட அரங்குக்கு அழைத்து சென்று மனு கொடுக்க செய்தனர்.

அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:–

நான் குடியிருக்கும் வீட்டை தோப்பூர் பகுதியை சேர்ந்த சிலர், கடந்த 9–ந் தேதி அடித்து நொறுக்கி, வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி, அருகில் உள்ள குளத்தில் வீசி சென்றனர். இதில் எனது குழந்தைகளின் பள்ளி புத்தகங்களும் சேர்ந்து போய்விட்டது. இதுகுறித்து நான் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தேன். ஆனால் அந்த புகார் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நான் குடியிருக்கும் வீட்டையும், பொருட்களையும் சேதப்படுத்தியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அங்கிருந்த தனிப்பிரிவு போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது அஞ்சுகிராமம் போலீசார் விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனால் அந்தப்பெண் தனது குழந்தைகளுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அதன்பிறகே தீக்குளிப்பு போராட்ட தகவலால் ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்