இந்து அமைப்பினர் கொலை: பா.ஜனதா தலைவர்கள் கவர்னருடன் சந்திப்பு

இந்து அமைப்பினர் கொலை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் ஊர்வலமாக சென்று கவர்னரை சந்தித்தனர். பின்னர் அவர்கள் இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

Update: 2017-12-13 00:20 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டம் குமட்டா டவுன் பகுதியை சேர்ந்த பரேஸ் மேஸ்கா(வயது 40) என்பவர் கடந்த 10-ந் தேதி ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்து அமைப்பை சேர்ந்த அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானதால் கார்வார் மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் கூடினர்.

மகாத்மா காந்தி சிலை முன்பு இருந்து சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.அசோக், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா, ஷோபா எம்.பி. உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-எம்.எல்.சி.க்கள் ஊர்வலமாக ராஜ்பவனுக்கு சென்றனர். அங்கு கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து ஒரு மனுவை கொடுத்தனர்.

கார்வார் மாவட்டத்தில் இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோல் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் இதுபற்றி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கோ அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கோ உத்தரவிட வேண்டும் என்றும் கோரி அவர்கள் மனு கொடுத்தனர். கவர்னரை சந்தித்த பிறகு ஈசுவரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கார்வார் மாவட்டம் குமட்டாவில் இந்து அமைப்பை சேர்ந்த பரேஸ் மேஸ்காவை திட்டமிட்டு சிலர் கொலை செய்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி இந்த வழக்கை மூடிமறைக்க கர்நாடக அரசு முயற்சி செய்கிறது. அவருடைய பெற்றோர் தனது மகன் கொலை செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.

கர்நாடக அரசை கண்டித்து போராட்டம் நடத்துபவர்கள் மீது மாநில அரசு போலீசார் மூலம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த அரசு இந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. கர்நாடகத்தில் இதுவரை இந்து அமைப்புகளை சேர்ந்த 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசுக்கு அறிவுறுத்துமாறு கோரி கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.அசோக் கூறுகையில், “கேரளாவை போல் கர்நாடகத்திலும் இந்து அமைப்பினர் கொலை செய்யப்படுகிறார்கள். மாநில காங்கிரஸ் அரசு வாக்கு வங்கி அரசியலை நடத்துகிறது. காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய ஷோபா எம்.பி., “சித்தராமையா சுற்றுப்பயணம் முடித்து வரும் இடங்களில் இந்து அமைப்பினர் கொலை செய்யப்படுகிறார்கள். பரேஸ் மேஸ்கா கொலையை திட்டமிட்டு மூடிமறைக்க மாநில அரசு முயற்சி செய்கிறது. ஜிகாதி அமைப்புகள் மீது சித்தராமையா மென்மையாக நடந்து கொள்கிறார். இந்துமத அமைப்பினர் கொலை வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு அல்லது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்“ என்றார்.

மேலும் செய்திகள்