இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் தனது உறவினர்களுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.

Update: 2017-12-13 21:30 GMT

ஈரோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பெரிய ஓங்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் தனது உறவினர்களுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வந்து புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:–

ஈரோடு வின்ஸ்டார் நிறுவனத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறியதால் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை முதலீடு செய்தேன். ஆனால் அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். இதுதொடர்பாக ஏற்கனவே புகார் மனு கொடுத்து இருந்தேன். ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீதான வழக்கு சேலத்தில் உள்ளதால் அங்கு சென்று புகார் கொடுக்குமாறு போலீசார் தெரிவித்தனர். அங்கு சென்று புகார் கொடுத்தால், மோசடி நடந்த பகுதியில் புகார் கொடுக்கும்படி கூறுகின்றனர். நான் பணத்தை இழந்து தவிப்பதால் எனது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனது பணத்தையும் மீட்டுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

மேலும் செய்திகள்