சேலம் ஜங்சனில் பஸ் மீது மினிபஸ் மோதல்: பயணி பலி-19 பேர் காயம் டிரைவர் கைது

சேலம் ஜங்சனில் நின்ற பஸ் மீது மினிபஸ் மோதியதில் பயணி பரிதாபமாக இறந்தார். மேலும், 19 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-12-13 23:00 GMT
சூரமங்கலம்,

சேலம் சிவதாபுரம் அருகே உள்ள பெருமாம்பட்டியில் இருந்து நேற்று காலை 11 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சூரமங்கலம் நோக்கி ஒரு மினி பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் முருகேசன் (வயது 35) ஓட்டி வந்தார்.

வரும் வழியில் 2 மோட்டார்சைக்கிள் மற்றும் ஒரு கார் மீது மோதி விட்டு நிற்காமல் இந்த மினிபஸ் ஜங்சன் ரெயில் நிலையம் முன்பு உள்ள பஸ் நிலையத்தை நோக்கி வந்தது. அப்போது பழைய பஸ் நிலையத்தில் இருந்து வெள்ளாளப்பட்டியை நோக்கி புறப்பட்டு சென்ற தனியார் பஸ், ஜங்சன் ரெயில் நிலையம் முன்பு நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.

அந்த பஸ் மீது மினிபஸ் திடீரென நேருக்கு நேர் மோதியது. இதனால் 2 பஸ்களின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும், கண்ணாடிகள் உடைந்து சிதறியது. பஸ்சில் இருந்த பயணிகள், ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என கூச்சலிட்டனர்.

இந்த விபத்தில் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த மணி (28), அலமேலு (60), பொன்னம்மாள் (70), சூரமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள் (45), அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த வள்ளி (40), வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் (62), தங்கராஜ் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே, கிரேன் வரைவழைக்கப்பட்டு 2 பஸ்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிபஸ் டிரைவர் முருகேசனை கைது செய்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்