மனுநீதி நாள் முகாமில் ரூ.34½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்

குமாரபாளையம் அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் 201 பயனாளிகளுக்கு சுமார் ரூ.34½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

Update: 2017-12-13 22:45 GMT
குமாரபாளையம்,

குமாரபாளையம் அருகே உள்ள அமானி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நேற்று மனுநீதி நாள் முகாம் கத்தேரி பிரிவில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொது மக்களை அதிகம் அச்சுறுத்தி வந்த டெங்கு காய்ச்சல் நாமக்கல் மாவட்டத்தில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காய்ச்சலை பரப்பக்கூடிய ஏ.டி.எஸ் எனப்படும் டெங்கு கொசுக்கள் சுத்தமான நீரில் மட்டுமே வளரக்கூடியது. குறிப்பாக ஒரு சிறிய பிளாஸ்டிக் கப்பில் சேருகின்ற மழை நீரில் கூட இத்தகைய கொசுக்கள் எளிதில் உற்பத்தி ஆகும். இதை தடுப்பதற்கு நாம் வீடு, சுற்றுப்புறம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

வேளாண்மை துறையின் சார்பில் விவசாயத்தை மேம்படுத்திட, உணவு தானிய உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நீர் சிக்கனத்தை கடைபிடித்திட குறைந்த நீரில் அதிக மகசூல் பெற்றிட, 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்கி வருகின்றது. இத்தகைய திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான, தகுதியான திட்டங்களுக்கு விண்ணப்பித்து, அரசின் திட்டங்களை பெற்று பயனடைந்து தங்களின் வாழ்க்கை தரத்தினையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து 201 பயனாளிகளுக்கு வேளாண் கருவிகள், தென்னங்கன்றுகள் உள்பட ரூ.34 லட்சத்து 46 ஆயிரத்து 305 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

முகாமில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சீனிவாசன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முரளிகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பர்ஹத் பேகம், மாவட்ட சமூகநல அலுவலர் டாக்டர் அன்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மாவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமையொட்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. முடிவில் குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்