ஓட்டேரி: லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை, மின்வாரிய அதிகாரி கைது

ஓட்டேரி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம் சிக்கியது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2017-12-15 23:00 GMT
பெரம்பூர்,

சென்னை சேத்துப்பட்டு ஸ்கூல் சாலையை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 54). இவர், ஓட்டேரி மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர், மின் இணைப்பு வழங்கக்கோரி விண்ணப்பம் அளிக்கும் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுப்பதாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக ஓட்டேரி மின்வாரிய அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அவர்கள், செயற்பொறியாளர் முருகதாஸ் அறையில் தீவிரமாக சோதனை செய்தனர்.

அதில், அவரது அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் முருகதாசிடம் இரவு முழுவதும் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு முருகதாசை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன், கைதான முருகதாசை தங்களுடன் அழைத்துச்சென்றனர்.

கணக்கில் வராத அந்த பணம், அவர் மின் இணைப்பு வழங்குவதற்காக பொதுமக்களிடம் இருந்து லஞ்சமாக பெற்றாரா? என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்