கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடியினர் காத்திருப்பு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2017-12-19 22:15 GMT

பழனி,

பழனி தாலுகாவில் உள்ள பெரியம்மாபட்டி, காவலப்பட்டி, ஆண்டிப்பட்டி, மண்திட்டு, சண்முகம்பாறை, வண்ணாந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த 70 ஆண்டுகளாக பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் எதையும் இவர்கள் பெறமுடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து சப்–கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என தெரிகிறது. இந்த நிலையில் பளியர் பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் வண்ணாந்துறையில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு பளியர் பழங்குடியினர் முன்னேற்ற சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் காளியப்பன் முன்னிலை வகித்தார். போராட்டத்தின் போது, பழங்குடியினருக்கு உடனே சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், கற்றாலம்பாறையில் பழங்குடியினர் 8 பேரிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

வன உரிமை சட்டம் 2006–ன் படி சிருவன மகசூழ் அடையாள அட்டை வழங்க வேண்டும், இந்த சட்டத்தை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து தகவலறிந்த பழனி நகர் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பழங்குடியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தாசில்தார் அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்ற பழங்குடியினர் போராட்டத்தை கைவிட்டனர்.

இது குறித்து பளியர் பழங்குடியினர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கூறுகையில், தாசில்தார் அலுவலகத்தில் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் எங்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

மேலும் செய்திகள்