கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு ஜனவரி 2-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு வருகிற ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து நாமக்கல் கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Update: 2017-12-21 23:00 GMT
நாமக்கல்,

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். இவர்களில் 15 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

யுவராஜ் வேலூர் சிறையிலும், அவரது கார் டிரைவர் அருண் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் காணொலி காட்சி மூலம் யுவராஜின் நீதிமன்ற காவலை வருகிற ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதேபோல் யுவராஜின் கார் டிரைவர் அருணின் நீதிமன்ற காவலும் ஜனவரி 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ந் தேதி போலீசார், யுவராஜை வேலூர் சிறையில் இருந்து அழைத்து வந்து, நாமக்கல் முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள 12 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர்.

அவர்கள் 12 பேரும் கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி, 12 பேரின் ஜாமீனையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரசு சிறப்பு வக்கீல் செல்வராஜ் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி 12 பேருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். நேற்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான 12 பேரும் தங்களின் செயலுக்கு மன்னிப்பு கோரி கடிதம் கொடுத்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற ஜனவரி மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். 

மேலும் செய்திகள்