தேக்கடி ஏரியில் ஒரே ஆண்டில் 10 லட்சம் பேர் படகு சவாரி

தேக்கடி ஏரியில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேர் படகு சவாரி செய்துள்ளனர். தேக்கடி ஏரி மூலம் கேரள அரசுக்கு ஒரு ஆண்டில் ரூ.40 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Update: 2017-12-30 22:30 GMT
தேனி,

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தேக்கடி ஏரி அமைந்து உள்ளது. இந்த ஏரியில் கேரள சுற்றுலாத்துறை மூலமும், வனத்துறை மூலமும் சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு படகு சவாரி செய்வதற்காக கேரள மாநிலம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

படகு சவாரி செய்வதற்கு ஆன்லைன் மூலமும், நேரிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது வழக்கம். படகு சவாரி செய்யவும், தேக்கடி ஏரியை ரசிக்கவும் இங்கு மக்கள் வந்து செல்கின்றனர்.

இதற்காக படகு சவாரிக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது போல், தேக்கடிக்கு நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஒரு ஆண்டு கால கட்டத்தில் தேக்கடி ஏரியில் சுமார் 10 லட்சம் பேர் படகு சவாரி செய்துள்ளனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேக்கடி ஏரியை வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து கேரள சுற்றுலாத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ‘கடந்த ஓராண்டு கால கட்டத்தில் படகு சவாரி மூலம் மட்டும் ரூ.30 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து உள்ளது. நுழைவு கட்டணம் மூலமாக சுமார் ரூ.10 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. அந்த வகையில் தேக்கடி ஏரியை வைத்து கேரள சுற்றுலா துறைக்கும், வனத்துறைக்கும் சுமார் ரூ.40 கோடி அளவில் வருவாய் கிடைத்து உள்ளது’ என்றார்.

பள்ளி அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் தேக்கடியில் குவிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் உள்ளது. தேக்கடி ஏரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகு சவாரி செய்வதற்கு டிக்கெட் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

மேலும் செய்திகள்