மணல் கடத்திய கணவன்–மனைவி உள்பட 5 பேர் கைது

சிவகிரி அருகே மணல் கடத்திய கணவன்–மனைவி உள்பட 5 பேர் கைது.

Update: 2017-12-30 21:30 GMT

சிவகிரி,

சிவகிரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் சிவகிரி அருகே உள்ளார்–தளவாய்புரத்திற்கு மேற்கே தலையணை செல்லும் பாதையிலும், கணபதி ஆற்றுப்பகுதியிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உள்ளார்–தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (வயது 42), அவரது மனைவி பூரணம் (32) ஆகியோர் ராஜசிங்கப்பேரி கண்மாய் ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் அள்ளி சாக்கு மூட்டைகளாக கட்டி மாட்டுவண்டியில் ஏற்றி வந்தனர். மாட்டு வண்டியை பூரணம் ஓட்டினார். முருகன் மோட்டார் சைக்கிளில், மாட்டு வண்டியின் பின்னால் வந்து கொண்டிருந்தார். போலீசார் மாட்டுவண்டியை வழிமறித்து சோதனை செய்ததில், மணல் மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கணவன்–மனைவியை போலீசார் கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ராஜசிங்கப்பேரி கண்மாய் ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் அள்ளி சாக்கு மூட்டைகளாக கட்டி மாட்டு வண்டியில் ஏற்றி வந்த, உள்ளார்–தளவாய்புரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் (30), சின்னச்சாமி மனைவி ஜெயலட்சுமி (30) ஆகியோரை போலீசார் கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் அதே ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் அள்ளி மூட்டையாக கட்டி மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்த, சிவகிரி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி (30) என்பவரையும் போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்