வேடசந்தூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி நகை–பணம் கொள்ளை

வேடசந்தூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி நகை–பணத்தை கொள்ளையடித்து விட்டு, மயக்க மருந்தை தெளித்து தப்பிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-12-30 21:45 GMT

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள ஆர்.புதுக்கோட்டையை சேர்ந்தவர் சாதிக்பாட்சா. இவர் தனது மனைவி குர்ஷிதாபானு(வயது 34) மற்றும் குழந்தையுடன் வேடசந்தூரில் உள்ள தனது மாமியார் மைதீன்பேகம் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அங்கிருந்தபடியே சீத்தமரம் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சாதிக்பாட்சா வழக்கம் போல் மில்லுக்கு வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து மைதீன்பேகம், குழந்தையை அழைத்து கொண்டு ஆர்.புதுக்கோட்டைக்கு சென்று விட்டார். இதனால் குர்ஷிதாபானு மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மாலை சுமார் 4.30 மணி அளவில் வீட்டின் அருகே ஒரு மோட்டார்சைக்கிள் வந்து நின்றது.

அதில் இருந்து இறங்கிய 2 மர்ம ஆசாமிகள், குர்ஷிதாபானு வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் கத்தியை காட்டி நகை, பணத்தை எடுத்து தரும்படி குர்ஷிதாபானுவை மிரட்டினர். திடீரென 2 பேர் வீட்டுக்குள் புகுந்து கத்தியுடன் மிரட்டியதால், குர்ஷிதாபானு பயத்தில் செய்வதறியாது திகைத்து நின்றார். உடனே அந்த மர்ம ஆசாமிகள் வீடு முழுவதும் ஒவ்வொரு இடமாக தேடினர்.

மேலும் வீட்டில் இருந்த பீரோக்களையும் திறந்து துணிகளை எடுத்து வீசினர். இறுதியில் பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் குர்ஷிதாபானு மீது மயக்க மருந்தை தெளித்தனர். அடுத்த சில நொடிகளில் அவர் மயங்கி கீழே சாய்ந்தார்.

இதையடுத்து அந்த 2 பேரும் மோட்டார்சைக்களில் தப்பி சென்று விட்டனர். நீண்டநேரம் கழித்து மயக்கம் தெளிந்த குர்ஷிதாபானு, உறவினர்களின் உதவியுடன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்