ஓட்டுக்கு பணம் கேட்டு தெருவில் இறங்கி போராடவும் மக்கள் ஆரம்பித்து விட்டனர் சீமான் பேட்டி

ஓட்டுக்கு பணம் கேட்டு தெருவில் இறங்கி போராடவும் மக்கள் ஆரம்பித்து விட்டனர் என புதுக்கோட்டையில் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

Update: 2017-12-30 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவுதின கூட்டத்தில் கலந்து கொள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. பணியாற்றாததால் தான் தோல்வி அடைந்து உள்ளது. முத்தலாக் கில் காட்டிய அவசரத்தை மத்திய அரசு ஏன் காவிரி மேலாண்மை வாரியத்தில் காட்டவில்லை. தமிழர்களுக்கு, மத்திய அரசு உரிமை கொடுக்கவில்லை. தேர்தலில் பணம் கொடுப்பவர்கள் லாபத்திற்காக தான் செயல்படுவார்கள். மக்களுக்காக செயல்படமாட்டார்கள். இந்தியாவில், மோசமான மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. இது ஒவ்வொரு தமிழனுக்கும் தலைகுனிவு.

கேரளாவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் மக்கள் விரட்டி அடிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என்றால் மக்கள் விரட்டியடிக்கிறார்கள். மக்கள் ஓட்டுக்கு பணம் கேட்டு தெருவில் இறங்கி போராடவும் ஆரம்பித்து விட்டனர்.

ஒகி புயலால் பாதிக் கப்பட்ட மீனவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்து உள்ளது. அந்த நிவாரணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். அரசு நினைத்து இருந்தால் புயல் ஓய்ந்து 3 நாட்கள் கழித்து கூட நிறைய மீனவர்கள் உயிரை மீட்டிருக்க முடியும். ஆனால் பொறுப்பற்ற மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை திட்டமிட்டு படுகொலை செய்திருக்கிறது. இதற்கு காரணம் கிறிஸ்தவ மீனவ கிராமம் என்பதால் தான்.

தமிழகத்தில் அவர்களே ஆட்சியை கலைப்பார்கள். அதற்கான நாள், நட்சத்திரம் எல்லாம் குறித்து இருப்பார்கள். அதற்காகத்தான் கவர்னர் ஆய்வு நடத்தி வருகிறார்.பெரியபாண்டியன் உயிரிழப்பின் மூலம் ஒரு நேர்மையான அதிகாரியை நாம் இழந்து நிற்கிறோம். முழுமையான விசாரணை நடத்தினால் தான் நமக்கு உண்மை நிலை தெரியும். பல தலைவர்களின் வாழ்விடங்கள் நினைவிடங்களாக ஆக்கப்பட்டு உள்ளது. இதேபோல ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்குவது வரவேற்கத்தக்கது. இதற்கு தீபா என்ன சொல்லப்போகிறார் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்