8 ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளில் கடத்திய வாலிபர் கைது

மண்ணச்சநல்லூர் அருகே 8 ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

Update: 2017-12-30 23:00 GMT
சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் பகுதியில் ஆடுகள் அடிக்கடி திருட்டு போய் வருகின்றன. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா.அய்யம்பாளையத்தில் நேற்று அதிகாலை 2 மோட்டார் சைக்கிள்களில் சுமார் 8 ஆடுகளை ஏற்றிக்கொண்டு 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று கொண்டிருந்தது.

இதை பார்த்து சந்தேகம் அடைந்த அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். அதில், ஒருவர் சிக்கினார். மற்ற 3 பேர் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த நபரையும், 8 ஆடுகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பிடிபட்டவர் மண்ணச்சநல்லூர் காந்தி நகரை சேர்ந்த ரஹீம் (வயது 20) என்பதும், தப்பி ஓடிய 3 பேரும் அவரது கூட்டாளிகள் என்பதும், புத்தனாம்பட்டி அருகே உள்ள நடுவலூர், அம்மாபட்டி, ராசாம்பாளையம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் பட்டியில் அடைக்கப்பட்டு இருக்கும் ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிள்களில் கடத்தி சென்று சமயபுரம் மற்றும் திருச்சி அருகே உள்ள தாயனூர் ஆட்டுச் சந்தைகளில் விற்று வந்ததும் தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஹீமை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்