புதுப்பட்டு ஊராட்சி அலுவலகம் முன்பு தீப்பந்தம் ஏந்தியபடி நூதன போராட்டம்

புதுப்பட்டு ஊராட்சி அலுவலகம் முன்பு தெருவிளக்குகளை சரி செய்யக்கோரி தீப்பந்தம் ஏந்தியபடி கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-30 23:00 GMT
ஆரணி,

ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலை நெசல் கூட்ரோட்டில் இருந்து புதுப்பட்டு, நெசல் ஆகிய ஊராட்சிகளுக்கு செல்லும் சாலையில் சுமார் 25 தெருவிளக்குகள் உள்ளன. அவற்றில் ஒரு சில விளக்குகள் மட்டுமே கடந்த 3 மாத காலமாக எரிகிறது. மேலும் நெசல், புதுப்பட்டு கிராமத்தில் சுமார் 30 தெருக்கள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. தற்போது 10 தெருவிளக்குகள் மட்டுமே எரிகிறது.

நெசல், புதுப்பட்டு கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் படித்து வருகிறார்கள். மாணவர்கள் பள்ளியில் இருந்து வரும்போது கூட்ரோட்டில் இருந்து வீட்டிற்கு நடந்து செல்கிறார்கள். கூட்ரோட்டில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் சாலையில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் இரவு நேரங்களில் செல்லும்போது மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் சாலையில் ஜல்லி கொட்டப்பட்டுள்ளதால், மாணவர்கள் தட்டு தடுமாறி நடந்து செல்கின்றனர்.

இதுதொடர்பாக கிராம பொதுமக்கள் ஊராட்சி செயலாளர், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதுப்பட்டு ஊராட்சி அலுவலகம் முன்பு புதிய நீதிக்கட்சி ஆரணி ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் புதுப்பட்டு, நெசல் மற்றும் ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள தெருவிளக்குகளை சரிசெய்யக்கோரி தீப்பந்தம் ஏந்தியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனவரி 5-ந் தேதிக்குள் தெருவிளக்குகளை சரிசெய்யாவிட்டால் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடத்த போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்