‘எந்த சூழ்நிலையிலும் பா.ஜனதாவை விட்டு விலகமாட்டேன்’ முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே பேட்டி

எந்த சூழ்நிலையிலும் பா.ஜனதாவை விட்டு விலகமாட்டேன் என முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே கூறியுள்ளார்.

Update: 2017-12-30 23:45 GMT

மும்பை,

மராட்டிய பா.ஜனதாவில் முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே. தன் மீது எழுந்த நில அபகரிப்பு, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு இவருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.

இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், வேறு கட்சிக்கு தாவும் திட்டத்தில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஏக்நாத் கட்சே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாளுக்கு நாள் என்னை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கள் கட்சியில் சேர்க்க பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் என்னை அணுகுகின்றனர். அழகான பெண்ணை, பல வாலிபர்கள் தங்கள் வசம் இழுக்க நினைப்பார்கள். இன்று அதுபோன்ற நிலையில் தான் நான் உள்ளேன்.

எனினும் பா.ஜனதாவில் இருந்து விலகுவது குறித்து நினைத்து பார்க்க கூட முடியாது. எனது 40 ஆண்டு வாழ்க்கையை கட்சிக்காக கொடுத்துள்ளேன். எந்த சூழ்நிலையிலும் நான் கட்சியை விட்டு விலக மாட்டேன். நான் உண்மையான பா.ஜனதா தொண்டன். கட்சியிலேயே தான் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்