வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-12-31 22:15 GMT
பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் பாத்திமா (வயது 50). இவரது மகன்கள் பிரதாப், பிரசன்னா. இவர்களுக்கு காட்பாடி தாலுகா மாலிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கத்தின் அடிப்படையில் பாத்திமாவின் வீட்டிற்கு பிரகாஷ் அடிக்கடி வந்து சென்றபோது, பிரகாஷ் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து பணம் சம்பாதித்துவிட்டு ஊருக்கு வந்து இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை எடுக்கும் ஏஜெண்டு தனக்கு நன்கு தெரியும் என்றும், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

வாலிபருக்கு வலைவீச்சு

இதனை நம்பிய பாத்திமா, தனது மகன்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தரும்படி ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரகாசிடம் கொடுத்தார். ஆனால் சொன்னபடி அவர் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் பாத்திமா பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் பிரகாஷ் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி தலைமறைவாகி விட்டார்.

அதைத் தொடர்ந்து பாத்திமா நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரணாம்பட்டு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரகாசை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்