திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.1½ கோடி நகை மீட்பு போலீஸ் சூப்பிரண்டு தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 44 லட்சத்து 94 ஆயிரத்து 257 மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2017-12-31 22:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–

திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குற்றத்தடுப்பு, மது விலக்கு, போக்குவரத்து காவல், மதுவிலக்கு அமலாக்கம் போன்றவை முறையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பிற மாநில குற்றவாளிகளின் நடமாட்டத்தையும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளளச்சாராயம் கடத்துவதை தடுப்பதற்கு, தமிழக, ஆந்திர எல்லையோர சாலைகளில், 11 சோதனைச்சாவடிகள் அமைத்து, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வீடு புகுந்து திருடியது தொடர்பாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் 221 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் மொத்தம் ரூ.1 கோடியே 44 லட்சத்து 94 ஆயிரத்து 257 மதிப்பிலான 300 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த நகைகள் மற்றும் பொருட்களை திருடு போனவர்கள் அடையாளம் காட்டிய பின்னர் கோர்ட்டு மூலம் அவர்களிடம் ஒப்படைக் கப்படும். அதிக அளவு திருட்டில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் 1,156 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனர்.

அதோடு, நாள்தோறும் இயங்கும் வகையில் மின்னும் விளக்குகளுடன் கூடிய 32 ரோந்து மோட்டார் சைக்கிள்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் 6,995 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து சாலைகளிலும் வாகன தணிக்கைகள் நடத்தப்பட்டு விதிமுறை மீறுவோர் மீது 1 லட்சத்து 71 ஆயிரத்து 900 வழக்குகள் பதிவாகி, 6,600 ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்த வகையில் ரூ.3 கோடியே 11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 382 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

கந்துவட்டி கேட்டு மிரட்டல் வழக்கில் துரித நடவடிக்கை எடுத்து 9 பேர் கைது செயங்யப்பட்டுள்ளனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட 988 பேர் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1,046 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

இதில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் பதிவான 601 புகார்களில் 589 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் 297 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, ரூ. 11 கோடியே 25 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்