டேன்டீ தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.500 வழங்க வேண்டும் த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர் கோரிக்கை

டேன்டீ தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.500 வழங்க வேண்டும் என்று ஊட்டியில் த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் கூறினார்.

Update: 2018-01-01 21:45 GMT

ஊட்டி,

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. எனவே, அவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

ஒகி புயலால் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்க அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. ஆகவே, நிவாரணத்தை விரைவில் வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டதால் ரூ.17 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 40 ஆயிரம் மணல் லாரிகள் இயக்க முடியாமல் உள்ளன. இதனால் 16 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் முடங்கி உள்ளனர். தமிழக அரசு நீதிமன்றம் மூலம் இதற்கு தடையை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம். ரஜினி கூறியது போல, சிஸ்டம் மோசமாக உள்ளது. அவர் ஜி.கே.வாசன் போன்ற நல்ல தலைவர்களை ஆதரிக்க வேண்டும். கடந்த 1996–ம் ஆண்டு அளவுக்கு ரஜினி அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்பது சந்தேகம்.

ஆனால், கண்டிப்பாக திராவிட கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 2ஜி வழக்கில் விடுதலையானதை அடுத்து முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனை காங்கிரஸ் கண்டிக்காதது வேதனை அளிக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் டேன்டீ தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.500 வழங்க வேண்டும். கெயில் நிறுவனம் ராட்சத குழாய்களை பதிக்க முயற்சிப்பதால் ஈரோடு, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே, தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். த.மா.கா. இளைஞரணி சார்பில், வருகிற 4–ந் தேதி 10 லட்சம் இளைஞர்களை கட்சியில் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்