விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 1,836 பேர் மீது வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 1,836 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 60 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-01-01 22:30 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர். அப்போது போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நெல்லை புறநகர் மாவட்டத்தில் 1,636 பேரும், மாநகர பகுதியில் 200 பேர் மீதும் மொத்தம் 1,836 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 60 பேரின் வாகன ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

* கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் ஒரு பஸ்சில் கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு ஊர் திருப்பினர். சுற்றுலா பஸ் நெல்லையை அடுத்த நாரணம்மாள்புரம் நான்கு வழிச்சாலையில் நேற்று அதிகாலை வந்தது. அப்போது அந்த பஸ், முன்னால் சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி மீது மோதியதாக தெரிகிறது. இதில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

* களக்காடு கோவில்பத்தையைச் சேர்ந்த கணபதி மனைவி உச்சிமாகாளி (வயது 55). இவர் தென்காசி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று கோவில்பத்து ரைஸ்மில் அருகில் நடந்து சென்ற போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் உச்சிமாகாளி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

* செங்கோட்டை சேர்வைகாரன்புதூர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர்உசேன் (37). இவருடைய மனைவி பாத்திமா. ஜாகீர் உசேன் மது அருந்தி விட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகவும், இதனை அவருடைய மனைவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ஜாகீர் உசேன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வாலிபர் மீது தாக்குதல்

* பாளையங்கோட்டை மகராஜநகர் உழவர் சந்தை எதிரே உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்து பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை புத்தாண்டையொட்டி கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்து பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

* பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே இலந்தைகுளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆச்சிபாண்டியன் மகள் முத்துலட்சுமி (18). இவருடைய தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இதற்கு அதே பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டியனின் (28) தம்பிதான் காரணம் என்று அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிலர் பேசியதாக தெரிகிறது. இதனை தட்டிக்கேட்ட இசக்கிப்பாண்டியன், முத்துலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துலட்சுமியின் அண்ணன் பச்சைகிளி, இசக்கி பாண்டியனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஓடும் பஸ்சில் திருட்டு

* நெல்லை பேட்டை ரகுமான் பேட்டையை சேர்ந்த மியாக்கான் மகன் அகமது மீரான் (22). இவர் நேற்று முன்தினம் நெல்லை சந்திப்பில் இருந்து பேட்டைக்கு பஸ்சில் சென்றார். அப்போது ஒருவர், அகமது மீரான் மணிபர்சை திருடினார். இதைக்கண்ட மற்ற பயணிகள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர், பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பாரதிநகரை சேர்ந்த அன்பழகன் (43) என்பது தெரியவந்தது. இது குறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்தனர்.

* நெல்லை தச்சநல்லூர் கணபதி மில் காலனியை சேர்ந்தவர் விசாலாட்சி (48). இவர், அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி மனைவி கோமதி (48) என்பவரிடம் ரூ.2,300 கடன் வாங்கி இருந்தார். இந்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் விசாலாட்சியை, கோமதி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோமதியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்